சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

யார்,யாருக்கு வரும்?



யார், யாருக்கு வரும்?
இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம்.
ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் வயது அடிப்படையில் பார்ப்போமா?
ஒரு குழந்தைக்கு அல்லது இளவயதினருக்கு வருவதை விட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகத் தெரிகிறது.
வயது வருடங்களில் பத்தாயிரம் பேரில் சர்க்கரை உள்ளவர்கள்
1  முதல்  20  வயது வரை 4 சதவிகிதம்.
20 முதல்  40  வயது வரை 10 சதவிகிதம்.
50 முதல்  60  வயது வரை 100 சதவிகிதம்.
60 முதல்  70  வயது வரை 1000 சதவிகிதம்.
இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாலினம் அடிப்படையில்..
இளவயது சர்க்கரை நோய் (முதல் வகை) ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது.
முதிர்வயது சர்க்கரை (இரண்டாவது வகை) ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.
பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
45 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
திருமணம் கூட ஒரு விளைவுதான்..
ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தை ஓட்டும் ஆண்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக வருகிறது. விவாகரத்து செய்து கொண்ட அல்லது குடும்பத்தை விட்டு விலகி தனியே வாழும் ஆணுக்கும் சர்க்கரை நோய் அதிகம் வருவதாகத் தெரிகிறது.
பெண்களில் இதற்கு நேர் எதிர்மறையான நிலை காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து செய்து கொண்ட, குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு இந்த நோய் அதிகம் வருவதில்லை.திருமணமான பெண்களுக்கே அதிகம் வரும்.
பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு சர்க்கரை நோய் தோன்றுகிறது.
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு சர்க்கரை நோய் குறைவாகவும், பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.!
கருவுறும் காலத்தில் உடலில் ஏற்படும் இயக்க நீர் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கருவுறும் போது, அல்லது பிரசவத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களின் எடை அதிகமாகிவிடுகிறது. சர்க்கரை அதிகம் வர இதுவும் ஒரு காரணம்.
பரம்பரையில் எவருக்கும் நீரிழிவு இல்லாதிருந்தாலும் கூட, 6 குழந்தைகள் அதற்கு மேலும் பெறும் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் பெரும்பாலும் சர்க்கரை வந்து விடுகிறது.
அதிக எடையுள்ள குழந்தைகளைப் பெறும் தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 15சதவிகிதம் அதிகம் எனவும் தெரிகிறது.
பிறக்கும் போது குழந்தையின் எடை 4.5 கிலோவுக்கு மேல் இருந்தால், அந்தத் தாய்க்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
அடுத்து மிக முக்கியமான காரணி நாம் உண்ணும் உணவு முறை
அதிக கலோரிகள் உள்ள உணவை உண்ணும் சமூகத்தில் சர்க்கரை நோய் பரவலாகக் காணப்படுகிறது.
கலோரிகள் குறைந்த எளிய உணவையே எப்போதும் உட்கொள்பவர்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உணவுத் தட்டுப்பாடு இருந்ததால் எளிய உணவையே மக்கள் உண்டு வந்தனர். இந்தக் கால கட்டத்தில் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததாம்!
கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.
மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு இயக்க நீர் மாற்றங்கள் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருதய நோய்கள், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கும் கூட மன அழுத்தமே முக்கியமான காரணமாக அமைகிறது.
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பார்கள். முக்கியமாக சாக்லேட், சிப்ஸ் போன்றவை. இதனால் உடல் எடை அதிகமாவதும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணமாகிறது.
உடல் உழைப்பு இல்லாமை.
ஓடியாடி உழைப்பவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருவதில்லை.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வருகிறது.

போதைப் பொருட்கள்
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
பாரம்பரியம்
சர்க்கரை நோய் முழுக்க முழுக்க ஒரு பரம்பரை நோய் என்பது இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் பரம்பரையில் எவருக்கேனும் இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு கணிசமாக உயர்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
யார், யாருக்கு சர்;க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்? சுருக்கமாகச் சொல்கிறேன்.
பரம்பரையில் இந்நோய் உள்ளவர்களுக்கு
உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு
ஆண்களை விட பெண்களுக்கு
இளைஞர்களை விட முதியவர்களுக்கு
ஆண்களில் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு
பெண்களில் கல்யாணம் ஆகி குழந்தை உள்ளவர்களுக்கு
அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு
எடை அதிகமான குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு
போதைப் பொருட்களுக்கு அடிமை யானவர்களுக்கு.

No comments:

Post a Comment