சர்க்கரை நோய்

Loading

Friday, November 19, 2010

சர்க்கரை நோய் நோயாளிகளுக்கு வரும் கால் புண் நோய் பிரச்சனை

எனக்கு தெரிந்த ஒரு பிசினஸ் மேன் புலம்பிக் கொண்டே என்னிடம் வந்தார்.
“இந்தக் கால் புண் ரொம்ப நாளாப் பிரச்சனை குடுக்குது. எவ்வளவு நாள் மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. எவ்வளவு மருந்து சாப்பிட்டும் பிரயோசனமில்லை. பத்து வருசமா இருக்கு. முந்தி கொஞ்சம் கவனம் இல்லைத்தான். இப்ப ஒரு வருசமா நல்ல கொண்ரோல். பிளட் சுகர் வலு நோர்மலா இருக்கு எவ்வளவு நோர்மலா வைச்சிருந்தும் புண் காய மாட்டீங்குதே டாக்டர்” என்று நொந்துக் கொண்டார்.
அவருக்கு நீரிழிவு இருப்பது எனக்குத் தெரியும். உண்மைதான்! இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பல நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் சுலபமாகக் குணமாகிவிடுகின்றன. ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக அக்கறையோடு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பலரின் புண்கள் மாதக்கணக்கில் மாறாது தொல்லை கொடுக்கன்றன.
இது ஏன்? இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் புண்கள் ஆறாதிருக்கும் நிலை உடனடியாக ஏற்படுவதில்லை. அது தொடர்ந்து அதிகரித்திருக்கும் போது, உடலில் படிப்படியாக தோன்றும் பல்வேறு பாதிப்புகளால்தான் புண்கள் ஆறாத நிலை ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளர்களின் புண்கள் காயாதிருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம்.
முதலாவது காரணமானது அவர்களது கால்கள் நீரிழிவு நோய் காரணமாக மரத்துப் போவதாகும். நரம்புகள் பாதிப்புறுவதால் அவற்றின் செயற்திறன் குறைந்து கால்களில் உணர்வு குறைந்து போகும். ஆரம்ப கட்டத்தில் நோயளர்கள் இதை உணர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் நாட் செல்லச் செல்ல கால்களில் விறைத்த உணர்வு தெரியவரும். நடக்கும் போது மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்; பின்பு செருப்பு கழன்றால் கூடத் தெரியாத நிலை ஏற்படலாம். முள்ளு அல்லது ஆணி குத்தினாலோ, செருப்பு வெட்டினாலோ, தார் வீதி சுட்டுக் கொப்பளிப்பதோ தெரிவதில்லை.
கால்கள் மரத்திருப்பதால் ஏதாவது காயம் ஏற்படும்போது, வலி தெரியாது. அதை உணராது, மேலும் மேலும் அழுத்தி நடப்பதால் புண்கள் மாறாதிருப்பதுடன் பெருகவும் செய்யும்.
இரண்டாவது காரணம் நீரிழிவு நோய் காரணமாக காலிலுள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய இரத்தம் பாய்ச்சப்படுவதில்லை. எனவே காயம் அல்லது புண் உண்டாகும் போது அவற்றிக்கு போதிய இரத்தம் கிடைக்காது, இதனால் திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் புண்கள் ஆறுவதற்கும் தேவையான ஒட்சிசன் கிடைக்காது போய்விடுகிறது.
மூன்றாவது காரணம் விரைவில் கிருமிகள் தொற்றுவதாகும். முதல் கூறிய இரண்டு காரணங்களாலும் நீரிழிவு நோயாளர்களுக்கு புண்களில் கிருமி தொற்றுவதும், பெருகுவதும் அதிகம். இதனால் புண்கள் விரைவில் ஆறுவதில்லை. எனவே நீரிழிவு நோயுள்ளவர்கள் தமது இரத்த சர்க்கரையின்; அளவை ஆரம்பம் முதல் எப்பொழுதும் சரியான அளவில் பேணுவது அவசியம். அதனால் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் அவற்றை இலகுவாக குணமாக்குவதும் சாத்தியமாகும்.
ஆனால் நாட்பட்ட புண்கள் ஏற்பட்ட பின்தான் நீரிழிவைக் கட்டுப்படுத்த முயல்வதாவது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதுதான்.

No comments:

Post a Comment