சர்க்கரை நோய்

Loading

Thursday, August 12, 2010

இனிப்பு நோயின் கசப்பு முகம்

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை



இனிப்பு நோயின் கசப்பு முகம்

நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை தமிழில்  விளக்கும் வலை தளம் இது.




இன்றைக்கு உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது.உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் ஏழரை கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுகிறது.

எபிடெமிக் என்கிற ஆங்கில வார்த்தையை,இதுவரை நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்றுநோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சர்க்கரைநோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோய் என்பது குறிப்பிட்ட குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர் தொற்றாக உருவாகியிருப்பதையும் நாம் காண்கிறோம்.

பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரைநோய், இன்று இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்துவருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது.
இதேவேளை, இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று கூறுகிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.

நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை இந்தியாவில் உருவாகிவருகிறதா என்பது குறித்தும், நீரிழிவு நோய் தோற்றுவித்திருக்கும் சுகாதார பொருளாதார சிக்கல்கள் குறித்தும் இங்கே நாம் எடுத்துரைக்க போகிறோம் .

இந்தியாவில் சர்க்கரை நோயின் பொருளாதாரச் சுமை



ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்.

இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.

பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய கூடுதல் பொருளாதார சுமையை தாங்க முடியுமா என்பது பலராலும் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி.

இந்திய ஏழைகள், தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை தமது சொந்த பணத்தில் இருந்து செலவிடுவதாக எங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு சர்க்கரைநோய் போன்ற வாழ்நாள் முழுமைக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய் வந்துவிட்டால்,அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி அந்த சிகிச்சைக்காகவே செலவிடவேண்டிய சூழல் உருவாகும்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான ஏழைகளை நீரிழிவு நோய் என்பது மீளமுடியாத பொருளாதார படுகுழியில் தள்ளிவிடும் என்கிற அச்சங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இத்தைகைய ஏழை குடும்பங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவு என்பது, அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்ல, இவரைப்போல் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தி திறனையும் அது பாதிக்கும் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் உள்ஆபத்து.

No comments:

Post a Comment